ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இதையொட்டி இன்று காலை இளங்கோவன் மற்றும் கா‘ங்கிரஸ் நிர்வாகிகள் அண்ணா அறிவாலயம் சென்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு வரும்படி இளங்கோவன் முதல்வரிடம் கேட்டுக்கொண்டார்.
சந்திப்பு முடிந்து வெளியே வந்த வேட்பாளர் இளங்கோவன் கூறியதாவது:
ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெறும். ஏற்கனவே ஈரோடு கிழக்கில் அமைச்சர்கள் முத்துசாமி, கே.என். நேரு ஆகியோர் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். நான் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரையும் சந்தித்து ஆதரவு கேட்க இருக்கிறேன். நடிகர் கமலஹாசனை சந்தித்து பேச நேரம் கேட்டு இருக்கிறேன். அதன் பிறகு தொகுதிக்கு சென்று பிரசாரத்தை தொடங்குவேன்.
சோனியாகாந்தி, ராகுல், கார்கே ஆகியோர் விருப்பத்தின்படி நான் போட்டியிடுகிறேன். என்னை வேட்பாளராக்க வேண்டும் என திமுக தரப்பில் கூறவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.