எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் தமிழ்ப் பெண் என்ற பெருமையை முத்தமிழ்ச்செல்வி பெற்றுள்ளார். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 38 வயதான முத்தமிழ்ச்செல்வி, எவரெஸ்ட் சிகரத்தை அடைய நிதி கோரி தமிழக அரசை நாடினார். இவரின் தன்னம்பிக்கையை பாராட்டும் விதமாக அரசு சார்பில் 25 லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி எவரெஸ்ட் சிகரம் ஏறத் தொடங்கினார் முத்தமிழ்ச்செல்வி.
அவரது பிறந்தநாளான கடந்த 17 ஆம் தேதி அன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், தனது பயணத்தின் 51வது நாளான கடந்த 23 ஆம் தேதி ஏறத்தாழ 8,849 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து முத்தமிழ்ச்செல்வி சாதனை படைத்தார்.
இதனை தொடர்ந்து எவரஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள முத்துச்செல்வி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.