விருதுநகர் மாவட்டம் ஜோயல் பட்டியை சேர்ந்த 34 வயது பெண்மணி முத்தமிழ்செல்வி. இவர் கணவர் குணசேகர். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளது. தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கத்தில் தங்கி ஜப்பான் மொழி பயிற்றுவிப்பாளராக இருந்த முத்தமிழ் செல்வி, மலையேற்றம், கண்களை மூடியவாறு மலையிம் இருந்து இறங்கியும், வில் வித்தையில் சாதனை, குதிரையேற்றம் என பல சாதனைகளை புரிந்தார்.
இந்த நிலையில் பயிற்சியாளரான திரிலோகசந்தர் உதவியால் முத்தமிழ் செல்வி எவரெஸ்ட் சிகரம் அடைய பயிற்சி மேற்கொண்டார். ஆனால் பொருளாதார வசதியில்லாமல் தவித்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் அழைத்து, அவருக்கு 10 லட்சம் அரசு சார்பில் உதவி வழங்கினார். அத்துடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 15 லட்சம் தன் சார்பாக கொடுத்தார்.
இதையடுத்து தனது சாதனை பயணத்தை தொடங்கிய முத்தமிழ் செல்வி, கடந்த 23ம் தேதி எவரெஸ்ட் சிகரம் 8,848.86 மீட்டர் அடைந்து அங்கேயே வீடியோ பதிவு செய்து அதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பயிற்சியாளர் திரிலோகசந்தர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்திருந்தார். மேலும் சில தினங்களில் விமானம் மூலம் சென்னை வரவுள்ளார். அவரை உள்ளூரில் வரவேற்க விளையாட்டு துறை சார்பில் மிக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “எவரஸ்ட் ஏறுவது அத்தனை எளிதல்ல. தன்னம்பிக்கையுடன் அதற்கான முயற்சியை தொடங்கியிருந்தார் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரி முத்தமிழ்ச்செல்வி. அவரது பயணத்துக்கு கழக அரசு & தனியார் பங்களிப்புடன் ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கிய நிலையில், தமிழ்நாட்டிலிருந்து முதல் பெண்மணியாக வெற்றிகரமாக எவரஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து அடிவாரம் திரும்பியுள்ளார். தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள முத்தமிழ்ச்செல்விக்கு வாழ்த்துகள். அவரது சாதனை பயணங்களுக்கு கழக அரசு என்றும் துணை நிற்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.