ஈஷா சார்பில் திருச்சியில் நேற்று நடைபெற்ற மண்டல அளவிலான ‘ஈஷா கிராமோத்சவம்’ விளையாட்டு போட்டிகளை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் மேயர் அன்பழகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். விளையாட்டு போட்டிகள் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்வில் புத்துணர்வை உருவாக்கும் நோக்கத்துடன் ஈஷா கிராமோத்சவம் என்னும் விளையாட்டு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் முதல்கட்டமாக, கிளெஸ்டர் அளவிலான போட்டிகள் கடந்த மாதம் நடைபெற்றது. இதை தொடர்ந்து 2-வது கட்டமாக மண்டல அளவிலான போட்டிகள் திருச்சி இ.பி. ரோட்டில் உள்ள சந்தானம் வித்யாலயா பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து தேர்வான வாலிபால், கபடி வீரர்கள் பங்கேற்றனர்.
விறு விறுப்பாக சென்ற வாலிபால் போட்டியின் இறுதிப் போட்டியில் வடலூரைச் சேர்ந்த விமல் ஃப்ரண்டஸ் அணி பண்ருட்டியைச் சேர்ந்த நேதாஜி வாலிபால் கிளப் அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது. திருவாரூர் வலங்கைமான் அணி 3-வது இடமும், நாகப்பட்டினம் திட்டன்சேரி ஃப்ரண்ட்ஸ் அணி 4-வது இடமும் பிடித்தது.
இதேபோல், தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்ட ஆண்களுக்கான கபடி போட்டியில் திருச்சி அணி முதலிடம் பிடித்தது. திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் அணிகள் முறையே 2-வது, 3-வது, 4-வது இடங்களை கைப்பற்றின. மேலும், பெண்களுக்கான கபடி போட்டியில் திருவாரூர் அணி முதலிடமும், திருச்சி அணி 2-வது இடமும் பிடித்தது. மயிலாடுதுறை மற்றும் அரியலூர் அணிகள் சம புள்ளிகளை பெற்று 3-வது இடத்தை பிடித்தன. அமெச்சூர் கபடி சங்கத்தின் செயலாளர் திரு. வெங்கடசுப்பு, திருச்சி வாலிபால் சங்க தலைவர்
பச்சையப்பா, இந்திரா காந்தி கல்லூரியின் உடற்கல்வி துறை தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு தொகையும், பாராட்டு சான்றிதழும் வழங்கி கெளரவித்தனர்.
மண்டல அளவில் தேர்வாகியுள்ள அணிகள் செப்.23-ம் தேதி கோவையில் ஆதியோகி முன்பு பிரம்மாண்டமாக நடைபெறும் இறுதிப் போட்டியில் மோத உள்ளன. அதில் கபடியில் முதலிடம் பிடிக்கும் ஆண்கள் அணிக்கு ரூ.5 லட்சமும், பெண்கள் அணிக்கு ரூ. 2 லட்சமும் பரிசு தொகையாக வழங்கப்படும். மேலும், வாலிபால் போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட உள்ளது. சத்குரு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் இப்போட்டிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.