ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க. அறிவித்திருந்தது. இந்த சூழலில் அ.தி.மு.க. பிரமுகர் செந்தில் முருகன் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்கி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து செந்தில் முருகன் வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட செந்தில் முருகன் அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் இன்று தி.மு.க.வில் இணைந்துள்ளார். தி.மு.க.வில் இணைந்த செந்தில் முருகன் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமாருக்கு ஆதரவாக பரப்புரை செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
கடந்த முறை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடந்தபோது இதே செந்தில் முருகன் ஓபிஎஸ் அணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பின்னர் ஓபிஎஸ் போட்டி வேண்டாம் என அறிவித்ததை தொடர்ந்து செந்தில் முருகன் வாபஸ் பெறப்பட்டார். அதைத்தொடர்ந்து அவர் அதிமுகவில் இணைந்தார். இப்போது செந்தில் முருகன் திமுகவில் இணைந்துள்ளார்.