ஈரோடு, செட்டிபாளையத்தில் உள்ளது ஜேசிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இங்கு, 2,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கடந்த செப்., துவக்கத்தில் இப்பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. பள்ளிக்கு இ-மெயில் மூலம், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவன் என தெரிந்தது. அந்த மாணவன் மட்டுமின்றி, அவரது பெற்றோரையும் வரவழைத்து எச்சரிக்கை மற்றும் அறிவுரைகளை வழங்கினர் போலீசார், பள்ளி நிர்வாகத்தினர். இந்நிலையில் கடந்த, 12ல் மீண்டும் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அப்போதும், ஒன்பதாம் வகுப்பு பயிலும், 14 வயது மாணவன் மற்றும் அவருக்கு உதவியாக, 14 வயது மதிக்கத்தக்க இரு மாணவர்கள் இருந்தது தெரிந்தது. இதையடுத்து, அந்த மூன்று மாணவர்களையும் பள்ளியில் இருந்து முறைப்படி நீக்கி, பள்ளி நேற்று உத்தரவிட்டது. இதுபற்றி பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,’ மூன்று மாணவர்களின் பெற்றோரே முன் வந்து, வேறு பள்ளியில் சேர்ப்பதாக கூறி, மாற்று சான்றிதழை வாங்கி சென்றனர்’ என்றனர்.