ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரகத்திற்குட்பட்ட கிழங்கு குழி என்ற இடத்தில் ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பதை ரோந்து பணி மேற்கொண்டிருந்த வனப்பணியாளர்கள் பார்த்துள்ளனர். இதனையடுத்து, மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் அந்தியூர் வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
மேலும், கால்நடை மருத்துவர்கள் யானையை பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். இதில், உயிரிழந்த ஆண் யானைக்கு 25 வயது இருக்கலாம் என்றும், யானை இறந்து சுமார் 10 நாட்களுக்கு மேல் இருக்கும் என்றும், உணவுக்குழல் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உணவு உட்கொள்ள முடியாமல் உயிரிழந்து இருக்கும் என்றும் மருத்துவர் தெரிவித்தார்.
பிரேத பரிசோதனைக்கு பின்னர் யானையின் சுமார் 5 அடி நீளமுள்ள இரு தந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்டு அந்தியூர் வனத்துறை அலுவலகம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து யானையின் பிரேதம் மற்ற வனவிலங்கு உணவிற்காக அதே பகுதியில் அப்படியே விடப்பட்டது.