ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக சென்னையில் ஓபிஎஸ் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் இன்று ஆலோசனை நடத்தினர். கூட்டம் முடிந்ததும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகரன் கூறியதாவது:
இந்த இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவதாக இருந்தால் முழு ஆதரவை கழகம் அவர்களுக்கு அளிக்கும் என்று ஓ.பன்னீர் செல்வம் ஏற்கனவே அறிவித்துள்ளார். அவர்கள் எப்போது அதை அறிவித்தாலும் தேர்தல் பணியாற்ற தேர்தல் குழு தற்போது நியமிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பாஜக போட்டியிடவில்லை என்று வேறு முடிவு எடுத்தால் ஓ.பன்னீர் செல்வம் வேட்பாளரை அறிவிப்பார். காங்கிரஸ் போட்டியிடுகிறபோது ஒரு தேசிய கட்சியாக பாஜக போட்டியிடுவது பொறுத்தமாக இருக்கும் என்ற கருத்தை வெளியிட்டார்கள். இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடவில்லை என்று அறிவிக்கும்பட்சத்தில் வேட்பாளரை அறிவிக்க ஓபிஎஸ் தயாராக உள்ளார். கூட்டணியில் உள்ள ஒருவருவருக்கு (பாஜக) ஒரு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அந்த வாய்ப்பை அவர்கள் (பாஜக) ஏற்றுக்கொள்வார்களா? இல்லையா? என்பதற்காக கால அவகாசம் உள்ளது. 31-ம் தேதி வேட்புமனு தாக்குதலுக்கு முன் அதிமுக நல்ல முடிவு எடுக்கும். வைத்திலிங்கம் தலைமையில் 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது’ என்றார்.