ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மரணம் அடைந்ததை தொடர்ந்து, வரும் பிப்ரவரி 5ம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இன்று அங்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வருகிற 17-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். தொடர்ந்து பொங்கல் விடுமுறை வருவதால் மொத்தமே 10, 13, 17ம் தேதி என 3 நாட்கள் தான் வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்.
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலகமான ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுக்கான விண்ணப்பங்கள் வினியோகம் நேற்று தொடங்கியது. மேட்டூர் பத்மராஜன் உள்பட சுமார் 10 பேர் வேட்பு மனுக்களை வாங்கி சென்றனர்.
இன்று காலையிலேயே வேட்புமனு தாக்கல் செய்ய பத்மராஜன் வந்தார். அவர் முதல் நபராக வேட்புமனு தாக்கல் செய்தார். இன்று அவர் 240 முறையாக தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். எம்.எல்.ஏ, எம்.பி தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் வரை அனைத்து தேர்தல்களிலும் இவர் போட்டியிட மனு தாக்கல் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இவர் தவிர கோவை நூர்முகமது மற்றும் ஒருவர் என மொத்தம் 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 3 பேரும் சுயேச்சைகள்.