ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல். ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானால் அங்கு வரும் பிப்ரவரி 5ம் தேதி மீண்டும் இடைத் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் நாளை தொடங்குகிறது. காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்.
வேட்பு மனுக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் நாளை (10ம் தேதி) முதல் 17ம் தேதி வரை பெறப்பட உள்ளது. 18ம் தேதி வேட்பு மனுக்கள் பரீசிலனை செய்யப்படும். தொடர்ந்து, வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ள 20ம் தேதி இறுதி நாளாகும். அன்று மாலை 4 மணிக்கு மேல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.
இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு டெபாசிட் தொகையாக ₹10 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் ₹5 ஆயிரம் செலுத்தினால் போதுமானது .
பொங்கல் பண்டிகை அரசு விடுமுறை நீங்கலாக, 10, 13, 17 ஆகிய 3 நாட்கள் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுதாக்கல் செய்ய வேண்டும். மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கலுக்கான முன்னேற்பாடு பணிகளை மாநகராட்சி அலுவலர்கள் செய்து உள்ளனர்.
தேர்தல் விதிமுறையையொட்டி, மாநகராட்சி அலுவலகத்தின் நான்கு திசைகளிலும் உள்ள மீனாட்சி சுந்தரனார் சாலை, கச்சேரி வீதி சாலை, நேதாஜி சாலை, காந்திஜி சாலை, காமராஜ் சாலைகளில் 100 மீட்டர், 200 மீட்டர் எல்லைக்கோடு போடப்பட்டுள்ளது. இதில், 100 மீட்டர் எல்லைக்கோட்டுற்குள் வந்தவுடன் வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றுகிறார்களா? என போலீசார் மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர் மூலம் கண்காணிக்கப்பட உள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 26ஆயிரத்து 433 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இவர்கள் வாக்களிக்க 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.