ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக, நாதக வேட்பாளர்கள் நேரடியாக களம் காணுகின்றனர்.இதுதவிர சில சுயேச்சை வேட்பாளர் உட்பட்ட மொத்தம் 55 பேர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என அறிவித்திருந்தது. அதிமுக தலைமை அறிவிப்பை மீறி அக்கட்சியின் ஈரோடு மாநகர எம்ஜிஆர் இளைஞர் அணியின் துணை செயலாளராக பதவி வகித்த ஈரோடு அக்ரஹார வீதியைச் சேர்ந்த செந்தில் முருகன் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
செந்தில் முருகன் கடந்த 2023ம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆனால் சின்னம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையால் அவர் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். சில தினங்களில் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
செந்தில் முருகன் வேட்பு மனு ஈரோடு இடைத்தேர்தலில் ஏற்கப்பட்ட நிலையில், அதிமுக.வின் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக கட்சியில் இருந்து நீக்கம் செய்வதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில், சுயேச்சையாக போட்டியிட்ட செந்தில்முருகன் இன்று காலை மாநகராட்சி அலுவலகம் சென்று வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.
இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.