சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா இன்று அளித்த பேட்டி:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுகிறது. அதன்வேட்பாளராக ஈரோடு கிழக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் ஆனந்தன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் வரும் 31ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார். ஏற்கனவே இந்த தொகுதியில் தேமுதிக வெற்றி பெற்றுள்ளது.
இந்த தொகுதியில் ஏன் இத்தனை அவசரமாக இடைத்தேர்தல் நடத்துகிறார்கள் என்பது எங்களுக்கு மனவருத்தம் தான். தேர்தல் அறிவிக்கப்பட்டதால் நாங்கள் போட்டியிட வேண்டிய நிலையில் உள்ளோம். அதிமுக 4 அணிகளாக பிரிந்து கிடக்கிறது. அவர்களுக்கு சின்னம் இருக்கிறதா என்று தெரியவில்லை. நாங்கள் தனியாக களம் காண்கிறோம். பண பலம், அதிகார பலத்தை எதிர்த்து நாங்கள் போட்டியிடுகிறோம். எங்களுக்கு வெற்றிவாய்ப்பு அமோகமாக இருக்கிறது. எப்போதும் போல தேமுதிக தனித்து களம் காண்கிறது.
அதிமுக எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எங்களிடம் ஆதரவு கேட்டார்கள். மற்ற கட்சிகள் எப்போதும் எங்களிடம் ஆதரவு கேட்பார்கள். இப்போது நாங்கள் மற்றவர்களிடம் ஆதரவு கேட்கிறோம். அதிமுக எங்களை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் ஆதரவு கொடுத்தால் மனமாற ஏற்போம். நாங்கள் வெற்றிபெற எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என கேட்கிறோம். தேர்தல் பிரசாரத்தை விரைவில் தொடங்குவோம். விஜயகாந்த் பிரசாரம் செய்ய வருவாரா என்பது பின்னர் அறிவிப்போம்.
இவ்வாறு பிரேமலதா தெரிவித்தார்.