ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள எலவமலை ஊராட்சி மணக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் முனிராஜ்- கீர்த்தனா தம்பதியினர், இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் வர்ஷினி (13) தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார் இந்த நிலையில் முனிராஜ் சொந்த வேலை காரணமாக வெளியே சென்ற நிலையில், கீர்த்தனா ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவம் எடுத்து வீட்டில் சமைத்து இரு மகளுடன் மதியம் சாப்பிட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது மூத்த மகள் வர்ஷினி (13) தொண்டை அடைப்பதாக கூறி தண்ணீர் கேட்டு குடித்துள்ளார். தொடர்ந்து மூச்சு விட முடியாமல் தவித்துள்ளார், இதையடுத்து அவரது தாயார் கீர்த்தனா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வர்ஷினியை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளார். அங்கு வர்ஷினியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு போலீசார் பெற்றோரிடம் புகார் பெற்று பிரேத பரிசோதனை செய்து சிறுமியின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். உணவு சாப்பிடும் போது உணவு குழாயில் உணவு சிக்கி சிறுமி உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.