ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா எதிர்பாராத வகையில் திடீர் மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து காலியாக உள்ள இந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு விட்டதாக திமுக அறிவித்துள்ள நிலையில் வேட்பாளர் யார்? என்கிற கேள்வி எழுந்துள்ளது. மறைந்த எம்.எல்.ஏ.வின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்த தேர்தல் களத்தில் மக்களை சந்தித்தால், அவர்கள் வெற்றி பெறுவது எளிது என்று ஒரு கருத்து இருக்கிறது. எனவே மறைந்த எம்.எல்.ஏ.வின் தந்தையும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அவரது மனைவி வரலட்சுமி இளங்கோவன் மற்றும் இளைய மகன் சஞ்சய் சம்பத், திருமகன் ஈவெராவின் மனைவி பூர்ணிமா ஆகிய 4 பேரில் யாராவது ஓருவருக்கு வாய்ப்பு என கூறப்பட்டது. இந்த நிலையில் காங் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது..