Skip to content
Home » எறையூர் சர்க்கரை ஆலையில் அரவை, அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

எறையூர் சர்க்கரை ஆலையில் அரவை, அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

பெரம்பலூர் மாவட்டம்,  எறையூர் சர்க்கரை ஆலையின் நடப்பு பருவ அரவை பணியை  போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர்  கிரேஸ் பச்சாவ்,  பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர்.கே.என்.அருண்நேரு , பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் .ம.பிரபாகரன் , மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் .சி. ராஜேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சர்க்கரை ஆலை அரவை பணியை தொடங்கி வைத்த அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம்  தெரிவித்ததாவது:
பொதுத்துறை நிறுவனமான பெரம்பலூர் சர்க்கரை ஆலை தமிழ்நாடு அரசின் சர்க்கரை கழக கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களால் 1975 ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 1978 ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் 2010 ம் ஆண்டு எறையூர் சர்க்கரை ஆலையில் 18 மெகாவாட் இணைமின் உற்பத்தி திட்டம் துவங்கப்பட்டு, 2019 ம் ஆண்டு முதல் இணைமின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, 2024-25 ம் ஆண்டிற்கான அரவை பருவம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கரும்பு அரவை 8.03.2025 வரை நடைபெற உள்ளது. 2 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு கரும்பினை அரவை செய்திடவும் ஆலை சராசரி சர்க்கரை கட்டுமானம் 9.75% அளவிற்கு எய்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. தினசரி முழு அளவை திறனுடன் அரவை செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2023-24 ஆம் ஆண்டு அரவைப் பருவத்தில் 2.39 லட்சம் மெட்ரிக் டன்கள் கரும்பு அரவைக்காக 3,380 பயனாளிகளுக்கு ரூ.5.13 கோடி கரும்பு அரவைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கரும்பு அரவையில் கூடுதல் இலக்கு எட்டப்பட்டு விவசாயிகளுக்கு அரவைத்தொகை வழங்கப்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் கரும்பு பயிர் பரப்பு விரிவாக்கம் செய்திட  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரும்பு விவசாயிகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்து அவர்களுக்கான நலத்திட்டங்களையும்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறார்கள். இதனை விவசாய பெருமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் எறையூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி .ரமேஷ், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் க.ராமலிங்கம், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் முத்தமிழ்ச்செல்வி மதியழகன்,  உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.