எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுவினர், ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்தனர். தமிழகத்தில் ஆபத்தான போதைப்பொருள் புழக்கம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பலால் நிலவும் அச்சுறுத்தல் வருங்கால தலைமுறைகளுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு விளைவிக்கும் பாதிப்புகள் குறித்து விவரிக்கும் மனு ஒன்றை அளித்தனர். போதைப் பொருட்களைத் தடுக்கவும், அதில் தொடர்புள்ளவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது.. “தமிழகத்தை போதைப்பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும். இந்த குற்றத்தில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனையை பெற்றுத்தர வேண்டும். ஒருதுளி போதைப்பொருள்கூட தமிழகத்தில் விற்பனை ஆகாமல் தடுக்க வேண்டும் என்ற அதிமுகவின் நிலைப்பாட்டை ஆளுநரிடம் தெரிவித்திருக்கிறோம். அதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறோம்.
இந்த போதைப்பொருட்கள் மூலமாக வந்த பணத்தைத்தான், திமுக இந்த மக்களவைத் தேர்தலை சந்திக்க இருப்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த மோசமான நிலைக்குத் தமிழகம் தள்ளப்பட்டதற்குக் காரணம் திமுகதான். எனவே, இதற்கு தார்மீக பொறுப்பேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரது மகன் அமைச்சர் உதயநிதி ஆகியோர் அவர்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, 2019ம் ஆண்டில் இதே ஜாபர் சாதிக் மலேசியாவுக்கு போதைப்பொருட்களை கடத்தியதாக செய்திகள் வந்திருக்கின்றன. இதையெல்லாம் பார்க்கும்போது, போதைப்பொருட்கள் விற்பனை இன்றோ, நேற்றோ தொடங்கப்பட்டது இல்லை. பல ஆண்டுகளாக பல்வேறு வெளிநாடுகளுக்கு இந்த போதைப்பொருட்கள் விற்பனை நடந்துள்ளது. இதில் கிடைத்த வருமானத்தின் மூலம், தமிழக உயர் காவல்துறை அதிகாரிகள், முதல்வர் குடும்பத்துக்கு நெருக்கமானவர்களின் துணையோடு தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் ஜாபர் சாதிக் போதைப்பொருட்களை விற்பனை செய்துள்ளது தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது.
உண்மை வெளியே வந்துவிட்டது. இதை மறைப்பதற்கு என்னென்னவோ நாடங்களை இன்றைக்கு திமுக அரங்கேற்றி வருகிறது. ஜாபர் சாதிக் என்பவர், சென்னை மேற்கு மாவட்ட திமுகவின் அயலக அணி அமைப்பாளராக இருந்துள்ளார். அவர் முதல்வர் மற்றும் உதயநிதி ஆகியோரிடம் இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்தவர், ஒரு திரைப்படத்தை இயக்கியதாகவும் கூறப்படுகிறது. தான் அந்தபடத்தை தயாரித்து, அதற்கான நிதியை வழங்கியிருக்கிறார். காவல்துறை உயர் அதிகாரி அவருக்கு நற்சான்று பட்டத்தை வழங்கியிருக்கிறார். இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, மிகப்பெரிய சந்தேகம் ஏற்படுகிறது. மத்திய போதைப்பொருள் தடுப்பு அலுவலர், இந்த விவகாரத்தில் திரைப்படத்துறையினர், அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளதாக பேட்டி அளித்துள்ளார். எனவே, இந்த விவகாரம் குறித்து உரிய முறையில் தகுந்த விசாரணை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் உண்மை வெளியே வரும்” என்று அவர் கூறினார்