சேலத்தில் இன்று நிருபர்களை அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறியதாவது: அதிமுக.,வை பொறுத்தவரை நான் மட்டுமே பிரசாரம் செய்தேன். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிரசாரம் செய்தார். ஊடகங்கள் அதிமுக கூட்டணி குறித்து அவதூறு பரப்பின. விவாத மேடைகளில் இல்லாததும், பொல்லாததும் குறித்து விவாதிக்கப்பட்டன. இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியில் அதிமுக கூடுதலாக ஒரு சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது. இதனை வெற்றியாக பார்க்கிறேன்.
ஓட்டு சதவீதத்தை வைத்து பா.ஜ., வளர்ந்துவிட்டதாக கூறுகின்றனர். 2019 ல் 18.8 சதவீத ஓட்டுகளை அக்கட்சி பெற்றது. ஆனால், 2024ல் அக்கூட்டணி 18.2 சதவீத ஓட்டுகள் மட்டுமே பெற்றது. அக்கூட்டணிக்கு 0.6 சதவீத ஓட்டுகள் குறைந்துள்ளது. 2019 ல் 33.5 % ஓட்டு பெற்ற திமுக., 2024ல் 26.93 % ஓட்டுகள் மட்டுமே பெற்றது. இதுவும் குறைவு தான். ஆனால், அதிமுக., தான் கூடுதல் ஓட்டுகள் பெற்றுள்ளது. அதிமுக.,வின் ஓட்டுகள் எங்கும் செல்லவில்லை. சூழலுக்கு ஏற்ப கூட்டணி அமைப்பது கட்சிகளின் நிலைப்பாடு. அது பின்னடைவை ஏற்படுத்தாது. தேர்தலுக்கு ஏற்ப வெற்றி தோல்வி அமையும். ஆனால், அதிமுக.,வுக்கு பின்னடைவு என்பது வேண்டும் என்று திட்டமிட்டு செய்யப்படும் பொய் பிரசாரம் ஆகும். அதிமுக., வளர்ந்து வருகிறது. பின்னடைவை சந்திக்கவில்லை. எதிரிகளோடு சேர்ந்து சிலர் குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். அதிமுக.,வைப் பற்றி பேச அமைச்சர் ரகுபதிக்கு தகுதி கிடையாது. அவரை அடையாளம் காட்டியது அதிமுக., தான்.
பா.ஜ., கூட்டணி இருந்து இருந்தால் வென்று இருப்போம் என முடிந்து போனதை பற்றி இப்போது பேசக்கூடாது. தேர்தலுக்கு முன் அண்ணாமலை பல்வேறு கனவுகளை கண்டு இருப்பார். அவரது கனவு பலிக்காததால் விரக்தியில் கடுமையாக விமர்சிக்கிறார். கடந்த முறை பெற்ற ஓட்டுகளை விட பா.ஜ., குறைவான ஓட்டுகளை மட்டுமே பெற்றுள்ளது. தமிழகத்தில் உள்ளதை போல், பல மாநிலங்களிலும் நிர்வாகிகள் உள்ளதால், பாஜ.,வுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பா.ஜ.,உடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.
அதிமுக.,வை அழித்துவிடுவோம் என பல காலமாக சொல்லிக் கொண்டு உள்ளனர். ஆட்சி அதிகாரம் வேண்டும் என்றால், என்றோ தேசிய கட்சியோடு சேர்ந்து இருப்போம். வெற்றி பெறும் வரை தேசிய கட்சிகள் நம்மை பயன்படுத்துகின்றன. பிறகு கண்டுகொள்வதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.