எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை ஏற்றுக் கொள்ள சசிகலா தயாராக உள்ளார். இபிஎஸ் தலைமையில் அடுத்த ஆட்சி அமைய வேண்டும் என்பதையும் சசிகலா ஏற்றுக்கொண்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
உத்திரமேரூர் அதிமுக பூத் கமிட்டு ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய வைகை செல்வன், “திமுகவை வீழ்த்த வேண்டுமென அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என ஓபிஎஸ் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை ஏற்றுக் கொள்ள சசிகலா தயாராக உள்ளார். இபிஎஸ் தலைமையில் அடுத்த ஆட்சி அமைய வேண்டும் என்பதையும் சசிகலா ஏற்றுக்கொண்டார். இதுகுறித்து விரைவில் முடிவுகள் அறிவிக்கப்படும்” என்றார்.
மதுரை உசிலம்பட்டியில் நடைபெற்ற ஜெயலலிதாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய சசிகலா, “வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுகவாக போட்டியிட்டு மகத்தான வெற்றியை பெறுவோம், அந்த இலக்கை நோக்கியே நமது பயணம். இதைத்தான் கழகத் தொண்டர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள். எனக்கென்று யாரும் இல்லை, தமிழக மக்கள்தான் எனது குடும்பம். தமிழக மக்களின் உரிமைக்காக எனது குரல் எப்போதும் ஒலிக்கும். எழுந்து நடந்தால் இமயமலையும் நமக்கு வழிகொடுக்கும். உண்மை என்றும் தோற்காது என்ற நம்பிக்கையுடன் இருங்கள் வெற்றி நிச்சயம்” என பேசியிருந்தார்.