Skip to content
Home »  இன்ஜினியரிங் தரவரிசை….நேத்ரா முதலிடம்….. திருச்சி ரோஷனி பானு 3ம் இடம்

 இன்ஜினியரிங் தரவரிசை….நேத்ரா முதலிடம்….. திருச்சி ரோஷனி பானு 3ம் இடம்

  • by Senthil

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 460 கல்லூரிகளில் 2023-24ம் கல்வியாண்டில் இன்ஜினியரிங் இளங்கலை படிப்புகளில் சேர கலந்தாய்வு நடக்க உள்ளது. இதற்காக விண்ணப்பப்பதிவு கடந்த  மே 5ம் தேதி தொடங்கி ஜூன் 4ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம், 2 லட்சத்து 29 ஆயிரத்து 167 விண்ணப்பங்கள் வந்தன. அதில், ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 124 பேர் கட்டணங்களுடன், சான்றிழ்களை பதிவேற்றம் செய்தனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் கடந்த 20ம் தேதி நிறைவடைந்தது.

இந்நிலையில், 1.78 லட்சம் மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் இன்ஜினியரிங் கவுன்சலிங் தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். மாணவர்கள், தரவரிசை பட்டியல்களை, www.tneaonline.org என்ற இணையதளத்தில் அறியலாம். தரவரிசைப் பட்டியலின் படி திருச்செந்தூரை சேர்ந்த நேத்ரா முதலிடத்தை பிடித்துள்ளார்.

தருமபுரி ஹரினிகா 2ம் இடத்தையும் திருச்சி ரோஷனி பானு 3ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.7.5% இட ஒதுக்கீட்டில் விண்ணப்பித்துள்ளோரில் சைதாப்பேட்டையை சேர்ந்த மகாலட்சமி முதலிடத்தை பிடித்துள்ளார்.அரசு பள்ளிகளில் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 31,445 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.இதில் 28,425 பேருக்கு தரவரிசை வழங்கப்பட்டுள்ளது. 7.5% ஒதுக்கீட்டில் கடந்தாண்டை விட கூடுதலாக 5,842 மாணவர்கள் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்ற 102 பேரில் 100 பேர் மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்கள் ஆவர்.

அரசுப்பள்ளியில் படித்து பொறியியல் படிப்பில் சேர்ந்த 13,284 பேர் புதுமை பெண் திட்டத்தில் பயனடைகின்றனர். இதனிடையே தரவரிசை பட்டியல் வெளியான பிறகு, தரவரிசை தொடர்பாக புகார்கள் தெரிவிக்க ஜூன் 30 வரை மாணவர்களுக்கு அவகாசம் வழங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சிறப்பு கலந்தாய்வு ஜூலை 2ம் தேதி முதல் 5ம் தேதி வரையிலும், பொதுக் கலந்தாய்வு ஜூலை 7ம் தேதி முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரையிலும், துணை கலந்தாய்வு ஆகஸ்ட் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரையிலும், எஸ்.சி.ஏ காலியிடம் எஸ்.சி வகுப்பிற்கான கலந்தாய்வு செப்டம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!