தஞ்சை விளார் சாலையில் உள்ள புதுப்பட்டினம் தில்லைநகரை சேர்ந்தவர் சுகுமாறன். இவருடைய மகன் மனோஜ்குமார் (வயது 19). இவர் தஞ்சையில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படித்தார். கடந்த 28-12-2013-ந்தேதி முதல் மனோஜ்குமாரை காணவில்லை. இதையடுத்து அவருடைய தந்தை சுகுமாறன், தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் தனது மகனை காணவில்லை என புகார் செய்தார்.
அதன்பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்ரகீம், மாயம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் தஞ்சை அருகே வெட்டிக்காடு செல்லும் சாலையில் உள்ள ஒரு பாலம் அருகே மனோஜ்குமார் 30-12-2013 அன்று கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடப்பதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது மனோஜ்குமாரை கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரிய வந்தது. மேலும் அவருடைய வயிறு, மார்புபகுதியும் குத்தி கிழிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து தாலுகா போலீசார் மாயமான வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தினர்.
மேலும் இந்த கொலை தொடர்பாக தஞ்சை தில்லைநகர் 6-ம் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் கோபி என்ற வெடிகோபி (36), தில்லைநகரை சேர்ந்த கண்ணன் மகன் முத்து என்ற பிரசாந்த் (36) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மனோஜ்குமார், ஒரு மாணவியை காதலித்து வந்துள்ளார். அந்த மாணவியை வெடிகோபியும் காதலித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த மாணவியும் மனோஜ்குமாரை காதலித்ததாக கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வெடிகோபி தனது நண்பர் பிரசாந்துடன், மோட்டார்சைக்கிளில் மனோஜ்குமாரை கடத்திச்சென்று கொலை செய்தது தெரிய வந்தது.
இது தொடர்பான வழக்கு தஞ்சை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், ஏட்டு பிரகாஷ்குமார் ஆகியோர் வழக்கு விசாரணையை நடத்தி வந்தனர். வழக்கை நீதிபதி சத்யதாரா விசாரித்து வெடிகோபி, பிரசாந்த் ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் இளஞ்செழியன் ஆஜராகி வாதாடினார்.