தஞ்சாவூர், ரெட்டிபாளையம் சாலை செந்தமிழ் நகரை சேர்ந்தவர் 43 வயது இன்ஜினியரிங் பட்டதாரி. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த அக்.1ம் தேதி இவருக்கு மர்ம நபரிடமிருந்து, டெலிகிராமில் மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில் ஆன்லைன் வாயிலாக, வீட்டிலிருந்தபடி பகுதி நேரமாக, விமான நிறுவனத்திற்கு ரேட்டிங் வழங்கினால், தினமும் வருவாய் ஈட்டலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
உடன் அந்த இன்ஜினியரிங் பட்டதாரி அத்தகவலில் வந்திருந்த ‘லிங்க்’ மூலம் வாயிலாக சென்று அதில் குறிப்பிட்டிருந்த பணிகளை மேற்கொண்டார். சில தினங்களில் அவருடைய வங்கி கணக்கிற்கு சில ஆயிரம் ரூபாய் வந்துள்ளது. இதையடுத்து அந்த நிறுவனத்தில் இருந்து தொடர்பு கொண்ட சிலர் அவரிடம் இன்னும் சில ‘டாஸ்க்’ செய்தால் அதிக லாபம் பெற முடியும்.
அதற்கு முதலீடு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதிக லாபம் கிடைக்கும் என்பதால் அந்த இன்ஜினியரிங் பட்டதாரியும் பல தவணைகளாக 18.19 லட்சம் ரூபாயை ஆன்லைன் வாயிலாக அவர்களின் வங்கி கணக்கிற்கு செலுத்தி உள்ளார்.
பல டாஸ்க்குகள் முடித்த நிலையில் லாபத்துடன் சேர்த்து தருகிறோம் என்று தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் அவருக்கு எந்த பணமும் வரவில்லை. தொடர்ந்து அந்த டெலிகிராம் லிங்கில் தொடர்பு கொள்ள முயன்ற போது, தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து அந்த மர்ம நபர்கள் தன்னை ஏமாற்றியதை உணர்ந்த அந்த இன்ஜினியரிங் பட்டதாரி, தஞ்சாவூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உத்தரவின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.