‘எமர்ஜென்சி’ காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட 301 பேருக்கு மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க உள்ளதாக அசாம் அரசு அறிவித்துள்ளது. முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை மந்திரி அசோக் சிங்கால் கூறியதாவது:-
எமர்ஜென்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்களை ஜனநாயக போராளியாக மாநில அரசு கருதுகிறது. ஜனநாயகத்திற்கான அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், 301 பேருக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க அசாம் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். அந்த நபர் இல்லாவிட்டால், அவரது மனைவிக்கு அந்தத் தொகை வழங்கப்படும். அவர்கள் இருவரும் இறந்துவிட்டால், அவர்களின் திருமணமாகாத மகளுக்கு அந்தத் தொகை கிடைக்கும்.
இந்தியாவில் பல மாநிலங்கள் எமர்ஜென்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குகின்றன. ஆனால் அசாம் வழங்கும் தொகை அதிகமானது. இவ்வாறு அவர் கூறினார். 1975-ம் ஆண்டு முதல் 1977-ம் ஆண்டு வரை 21 மாத காலத்திற்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.