சென்னை நகரில் இயக்கப்படும் மாநகர போக்குவரத்து கழக பஸ்களில் பயணிகளுக்காக பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. தான் பயணம் செய்ய விரும்பும் பஸ் எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது. அடுத்த பஸ் எப்போது வரும் என்பதை அறிய ‘சலோ’ செயலி பயன் பாட்டில் உள்ளது. இந்த நிலையில் மாநகர போக்குவரத்து கழக பஸ்களில் பெண்களின் பாதுகாப்புக்காக தற்போது சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக சென்னையில் இயங்கும் சுமார் 1200 மாநகர பஸ்களில் அவசர பட்டன்கள் பொருத்தப்பட்டுள்ளன. பஸ்களில் பயணம் செய்யும் ஆண்கள் தங்களை உரசினாலோ, பாலியல் தொல்லை கொடுத்தாலோ இந்த அவசர பட்டனை அழுத்தலாம். அதன் மூலம் அந்த நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பொது இடங்களிலும், பஸ்களிலும் மகளிர் பயணிகளுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சியுடன், மாநகர போக்குவரத்து கழகமும் இணைந்து இன்றும், நாளையும் விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்துகின்றன.
இந்த விழிப்புணர்வு பிரசாரம் சென்னை கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம், பிராட்வே, திருவான்மியூர், கிண்டி ஆகிய மாநகர போக்குவரத்து கழக டெப்போக்களில் நடந்தது. இந்த விழிப்புணர்வு பிரசாரத்தின் மூலம் பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் பெண்கள் அவசர பட்டன்களை எப்படி பயன்படுத்துவது, அரசு உதவி எண்களை எப்படி கையாள்வது என்பது பற்றி பெண்களுக்கு விளக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு பிரசாரத்துக்காக இந்த டெப்போக்களில் மாநகர போக்குவரத்து கழக பஸ் நிறுத்தப்பட்டு இருந்தது. அதில் அவசர பட்டனின் அமைப்பு, அவை எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி காண்பிக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு பிரசாரத்தின் போது தெரு நாடகமும் நடைபெற்றது. நாளையும் (30-ந்தேதி) இந்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெறுகிறது.