ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வனப்பகுதிக்கு உள்பட்ட குன்றி மலைக்கிராமத்தை சேர்ந்தவர் பொம்மே கவுடர் (55). விவசாயி. தி.மு.க. பிரமுகர். இதேபோல் அதே பகுதிைய சேர்ந்தவர் சித்துமரி (65). கூலித்தொழிலாளி. மாக்கம்பாளையத்தில் இருந்து மளிகை பொருட்களை வாங்கி விட்டு பொம்மே கவுடர் நேற்று வீட்டுக்கு நண்பர் ஒருவருடன் மோட்டார்சைக்கிளில் பின்னால் உட்கார்ந்தபடி சென்று கொண்டிருந்தார். இதேபோல் குன்றியில் இருந்து மாக்கம்பாளையத்துக்கு நண்பர் ஒருவருடன் மோட்டார்சைக்கிளில் பின்னால் உட்கார்ந்தபடி சித்துமரி வந்து கொண்டிருந்தார். கடம்பூரை அடுத்த தட்டப்பள்ளம் அருகே வந்த போது வனப்பகுதியில் இருந்து திடீரென காட்டு யானை வெளியேறி சாலைக்கு வந்தது. யானையை கண்டதும் அவர்கள் தங்களுடைய மோட்டார்சைக்கிளை அப்படியே போட்டு விட்டு தப்பி ஓடினர். எனினும் யானை ஆக்ரோஷத்துடன் பின் தொடர்ந்து சென்று பொம்மே கவுடர், சித்துமரி ஆகியோரை துதிக்கையால் தூக்கி வீசியது. பின்னர் அவர்கள் 2 பேரையும் காலால் மிதித்து கொன்று விட்டு அங்கேயே நின்று கொண்டது. மோட்டார்சைக்கிளில் வந்த மற்ற 2 பேரும் உயிர் தப்பினர்.. அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த கடம்பூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானையை காடுக்குள் அனுப்பி வைத்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் ஜிஎச்சிற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
