அரியலூர் மாவட்டத்தில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான யானைக்கால் நோய் கண்டறியும் சிறப்பு முகாம் கோவிந்தபுரம் ராம்கோ சிமெண்ட் ஆலையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் மரு. அஜிதா உத்தரவின் பெயரில் யானைக்கால் நோய் கண்டறியும் ரத்த மாதிரி சேகரிப்பு முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திகா அவருடைய தலைமையிலான மருத்துவ குழுவினர் இரத்த மாதிரிகளை சேகரித்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகீல் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் கார்த்திகேயன், சஞ்சய், அருண் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை மேற்கொண்டனர். அரியலூர் வட்டார ஆய்வக நுட்புணர்கள் ரத்த மாதிரி சேகரித்தனர். 115 வெளி மாநில தொழிலாளர்களுக்கு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. முகாமில் ராம்கோ சிமெண்ட் ஆலை நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.
யானைக்கால் நோய் க்யூலெக்ஸ் வகை கொசுக்களால் பரப்பப்படும் நோயாகும். ஆரம்ப நிலையிலேயே
கண்டறியப்பட்டால் உடல் உறுப்பு பாதிப்பின்றி முழுமையாக குணமடையலாம். ஆரம்ப நிலையிலேயே நோயாளிகளை கண்டறிவதற்காக சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இரவு நேரத்தில் தான் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட வேண்டும் என்பதால் இரவில் சேகரிக்கப்படுகிறது.
அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. மேலும், நான்காம் நிலை யானைக்கால் நோயாளிகளுக்கு அரசு உதவி தொகையாக மாதாமாதம் ரூபாய் ஆயிரம் மற்றும் ஆண்டுக்கு இரண்டு முறை அவர்களுடைய பாதிக்கப்பட்ட கால் மற்றும் கைகளை பராமரிக்க, பராமரிப்பு பொருட்களும் வழங்கப்படுகின்றது.