தமிழகத்தின் பல பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இது மனித – விலங்கு மோதலை அதிகரித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி வனப் பகுதியில் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி விவசாய நிலங்கள் மற்றும் ஊருக்குள் புகுந்து வீடுகளில் வளர்க்கப்பட்ட விலங்குகள் மற்றும் அங்கு வைக்கப்பட்டு இருந்த அரிசி போன்ற உணவுப் பொருள்களை உண்ண தொடங்கியது. வனப் பகுதி மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிய போதும் மனிதர்களின் உணவுப் பொருட்களை உண்டு பழகிய வனவிலங்குகள் வனப் பகுதிக்கு செல்லாமல் மலையை ஒட்டி உள்ள கிராமங்கள் ஒவ்வொன்றாக முகாமிட்டு அதன் உணவு, தண்ணீர் தேவையை நிறைவு செய்து வருகிறது. இவ்வாறு ஊருக்குள் புகுந்து வீடுகள், விளைநிலங்களை சேதத்தை ஏற்படுத்தி வரும் யானைகளை விரட்டும் போது விவசாயிகள் மற்றும் பொது மக்களை தாக்கி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. இதனால் மனித – விலங்கு மோதல்களும் தொடர்ந்து வருகிறது.
காட்டு யானைகளை விரட்ட வனத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பல்வேறு குழுக்களை அமைத்து யானைகளை விரட்டினாலும் மீண்டும் மீண்டும் அருகே உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விடுகிறது.
இந்நிலையில் தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசிபுரத்தில் நேற்று இரவு ஆக்ரோஷமாக உணவு தேடி ஊருக்குள் வரும் காட்டு யானையை பார்த்து அப்பகுதி பொதுமக்கள் அலறி கொண்டு கூச்சலிட்டனர். அதனை கண்டு கொள்ளாத அந்த ஒற்றைக் காட்டு யானை கம்பீரமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் நடந்து செல்கிறது. மேலும் அந்த ஒற்றை காட்டு யானை மீண்டும், மீண்டும் அப்பகுதியில் சுற்றி வருவதால் யானையை நிரந்தரமாக வனப்பகுதியில் விரட்டு வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.