கோவை, மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் கடந்த சில தினங்களாகவே காட்டு யானைகளின் நடமாட்டம் இருந்து வருகிறது.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் மூன்றாவது கொண்டை ஊசி வளைவு அருகே குட்டியுடன் இரு காட்டு யானைகள் சாலையில் உலா வந்தன.
இதனை கண்ட வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு தகவலளித்துள்ளனர்.விரைந்து வந்த வனத்துறையினர் சாலையில் உலா வந்த காட்டு யானைகளை நீண்ட நேரம் போராடி வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.
குட்டியுடன் காட்டு யானைகள் சாலையில் உலா வந்ததை வாகன ஓட்டிகள் தங்களது மொபைல் போனில் வீடியோவாக பதிவிட்டு அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இதனால் அச்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில் மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் கடந்த சில தினங்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.எனவே,இந்த வழியாக வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் பயணிக்க வேண்டும்.மேலும், மலைச்சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் தென்பட்டால் அதன் அருகில் செல்லவோ,செல்பி எடுக்கவோ, புகைப்படம் எடுக்கவோ முயல கூடாது.கூட்டாகவோ, தனியாகவோ சேர்ந்து அதனை விரட்ட முயல கூடாது.ஹாரன்களை அதிக சப்தத்தில் ஒலிக்க விடக்கூடாது.வனவிலங்குகளை துன்புறுத்தும் செயல்களில் ஈடுபட கூடாது.மீறினால் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.