Skip to content
Home » பொள்ளாச்சி பகுதியில் ஊருக்குள்புகுந்த யானை அட்டகாசம்

பொள்ளாச்சி பகுதியில் ஊருக்குள்புகுந்த யானை அட்டகாசம்

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான ஒகேனக்கல், தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி, பென்னாகரம் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமப்புறங்களுக்குள் நுழைவது வழக்கமாக இருந்து‌ வருகிறது. கடந்த சில மாதங்களாக ஒற்றை மக்னா யானை வனப்பகுதிக்கு செல்லாமல் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது.

கடந்த 5ம் தேதியன்று தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பெரியூர் ஈச்சம்பள்ளம் பகுதியில் வனத் துறையினர் கும்கி யானை உதவியுடன் மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இதையடுத்து கடந்த 6ம் தேதியன்று அந்த யானை கோவை மாவட்டம் டாப்சிலிப் வனச்சரகத்திற்கு உட்பட்ட வரகழியாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. அந்த யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். 10 நாட்களாக வனப்பகுதிக்குள் சுற்றித் திரிந்த மக்னா யானை, சேத்துமடை பகுதிக்கு சென்றது. பின்னர் நேற்று கிராம பகுதிக்குள் நுழைந்த அந்த யானை ஒரு இடத்தில் நிற்காமல், தொடர்ந்து நடந்து இடம் மாறிக் கொண்டு வருகிறது.
நல்லூர், கா.க.புதூர், ஆத்து பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளை கடந்தது. பாலக்காடு சாலையை கடந்த யானை, மதுக்கரை வனப்பகுதியை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
இதனிடையே சாலையில் யானை வருவதைப் பார்த்து வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கிராம பகுதிக்குள் காட்டு யானையின் நடமாட்டம் காரணமாக கிராம மக்கள் அச்சம் அடைந்தனர்.

மக்னா யானையை விரட்ட வனத்துறையினர் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. வனத்துறையினர் தொடர்ந்து யானையை கண்காணித்து வருவதாகவும், யானை நடமாட்டம் குறித்து கிராமங்களில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஜமீன் களத்தூர், கிணத்துக்கடவு,காளியபுரம், நல்லிகவுண்டன்பாளையம் வழுக்குபாறை, முத்து கவுண்டனூர், மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளை கடந்து கோவை மாநகர பகுதிகளை அடைந்தது. குனியமுத்தூர் அருகேயுள்ள செந்தமிழ் நகர், அறிவொளி நகர், பி.கே.புதூர் உள்ளிட்ட பகுதிகளில் யானை சுற்றித் திரிந்தது. இதனிடையே சேலம் – பாலக்காடு புறவழிச்சாலையை கடந்த மக்னா யானை, மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கிக்கிற்குள் நுழைந்தது. இதையடுத்து குரும்பபாளையம் பகுதியில் எதிரே வந்த ஒருவரை யானை தும்பிக்கையில் தள்ளி விட்டு சென்றது.

இதில் காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

யானை தற்போது கிருஷ்ணா கல்லூரி பின்புறம் உள்ள செந்தமிழ் நகர் பகுதியில் உள்ள புதர்மண்டிய பள்ளத்தில் நின்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!