பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) இன்று (செவ்வாய்க்கிழமை) ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகம் முழுவதும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஆசிரியர்கள் போராட்டத்தால், பெரும்பாலான பள்ளிகள்இயங்கவில்லை. 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் குறைந்த அளவிலான ஆசிரியர்களே பணிக்கு வந்துள்ளனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பூவத்தூர் தொடக்கப்பள்ளிக்கு வழக்கம் போல குழந்தைகள் பள்ளிக்கு வந்திருந்தனர். ஆனால் ஆசிரியர்கள் குழந்தைகளை வெளியேற்றிவிட்டு பள்ளிக்கு பூட்டு போட்டு பூட்டினர். இதனால் குழந்தைகள் மரத்தடியில் அமர்ந்திருந்தனர். இதுபோல பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாததால் இன்று ஒரு நாள் வகுப்பு இல்லாமல் குழந்தைகள் கல்வி பாதிக்கப்பட்டது.
பள்ளிகள் ஆசிரியர்கள் இன்றி இயங்காமல் இருக்கக்கூடாது என்றும் அனைத்து அரசுப்பள்ளிகளும் அறிவுரைகளை பின்பற்றி இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மாவட்ட மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. ஆனாலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும்பாலான தொடக்கப்பள்ளிகள் இயங்கவில்லை. மாவட்ட தலைநகரங்களில் ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.