காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் முக்கொம்பில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 64ஆயிரத்து 395 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்கு பின்னர் கொள்ளிடத்தில் அதிக அளவு வெள்ளம் பாய்ந்து செல்கிறது.
திருவானைக்காவல்- நம்பர் 1 டோல்கேட் இடையே உள்ள கொள்ளிடம் பாலத்தின் மேற்கு புறம் ஆற்றுக்குள் உயர்அழுத்த மின் கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கோபுரத்தின் அடியில் ஆற்றுக்குள் பில்லர் எழுப்பி அதன் மேல் கம்பம் நிறுவப்பட்டுள்ளது. கொள்ளிடம் வெள்ளத்தின் வேகம் காரணமாக வடக்கு புறம் உள்ள 2
பில்லர்கள் ஆற்றில் ஏற்கனவே இருந்த மட்டத்தில் இருந்து சற்று இறங்கி உள்ளது. இதனால் அந்த மின் கோபுரம் சிறிது சரிந்த நிலையில் காணப்பட்டது.
இதனால் உடனடியாக மின் வாரிய அதிகாரிகள் அங்கு வந்து ஆய்வு செய்தனர். அந்த வழியாக செல்லும் மின்சாரம் தடை செய்யப்பட்டது. எப்படியும் கொள்ளிடம் வெள்ளம் குறைய இன்னும் ஒரு வாரம் ஆகலாம் என்பதால் அதன் பிறகே அந்த பில்லர்களை சரி செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.