சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 12 மணியளவில் செங்கல்பட்டு நோக்கி புறப்பட்ட மின்சார ரயில் ஒன்று பரனூர் ரயில் நிலையத்தில் நின்றுவிட்டு அடுத்துள்ள செங்கல்பட்டு ரயில்வே சந்திப்புக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அப்போது கரிமேடு என்ற பகுதியில் இளைஞர் ஒருவர் திடீரென மின்சார ரயிலை மறித்து ஓட்டுநர் அறையில் பணியில் இருந்த லோகோ பைலட் சிகாமணி மற்றும் மோட்டர் மேன் ஆகியோரை தாக்க முயற்சித்துள்ளார். இதனால் ரயிலை லாக் செய்துவிட்டு அவர்கள் கீழே இறங்கவே கதவை உள்ளே தாளிட்டு கொண்டு ரயிலை இயக்க முயற்சித்துள்ளார். இதனிடையே ரயில்வே போலீசாருக்கு ரயில் ஓட்டுநர் தகவல் தெரிவிக்கவே நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் இளைஞரை காவல்நிலையம் அழைத்து சென்றனர். முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்த எம்.சி.ஏ. பட்டதாரியான சுரேஷ் என்பதும், சிறுசேரியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்துள்ளது. ரயிலை ஓட்ட வேண்டும் என்ற இளைஞரின் விபரீத ஆசையால் செங்கல்பட்டு தாம்பரம் வழித்தடத்தில் சிறிது பாதிக்கப்பட்டது.