Skip to content
Home » தேர்தலில் தோல்வி ஏன்?…….. டில்லியில் 25, 26ல் பாஜக முக்கிய ஆலோசனை

தேர்தலில் தோல்வி ஏன்?…….. டில்லியில் 25, 26ல் பாஜக முக்கிய ஆலோசனை

  • by Senthil

பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட அனைத்து மாநில பாஜக தலைவர்களின் உயர்நிலை குழு கூட்டம் வரும் 25 மற்றும் 26ம் தேதிகளில் டில்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. மேலும் நாடு முழுவதும் பாஜகவுக்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்தும், பெரும்பான்மை பலத்திற்கு குறைவான இடங்களில் தோல்வி அடைந்தது குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

பாஜகவின் படுதோல்விக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உத்தரபிரதேச மாநிலம் முக்கியமாக அமைந்தது. இம்மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருந்தும் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 33 தொகுதிகளை மட்டுமே பாஜகவால் பெற முடிந்தது. இதற்கிடையே உத்தரபிரதேசத்தில் இன்னும் சில வாரங்களில் 10 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் உள்கட்சி மோதல்கள் அதிகரித்துள்ளதால், இடைத்தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியை பாஜக பெறுமா? என்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் 10 தொகுதிகளில் 3 இடங்கள் சமாஜ்வாதி கட்சியின் கோட்டையாகவும், 3 இடங்கள் பாஜகவின் கோட்டையாகவும் உள்ளன. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக மாநில கட்சித் தலைவர்கள் போர்க்கொடி தூக்கி  உள்ளனர்.

இடஒதுக்கீடு விவகாரத்தில் மாநில அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக அப்னா தளம் தலைவரும், மத்திய  இணை அமைச்சருமான அனுப்ரியா படேல், முதல்வர் யோகிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதற்கிடையே கன்வார் யாத்திரை பாதையில் அமைந்துள்ள உணவகங்களின் உரிமையாளர்களின் பெயர்களை காட்சிப்படுத்த வேண்டும் என்று யோகி அரசு உத்தரவிட்டது. இவ்விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்றது.  கடைக்காரர்களின் முகவரி, போன் நம்பர்களை காட்சிப்படுத்த வேண்டாம் என கோர்ட் உத்தரவிட்டது.  இதுவும் மாநில அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உத்தரபிரதேச மாநில பாஜக தலைவர் பூபேந்திர சிங் சவுத்ரி, சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார். எனவே வரும் 25, 26ம் தேதிகளில் நடக்கும் பாஜக உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பின்னர், பல மாநில தலைவர்கள் மாற்றப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!