கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தல், ஏற்கனவே 5 முறை ஒத்தி வைக்கப்பட்டது. ஐகோர்ட் உத்தரவுப்படி 6வது முறையாக இன்று மாவட்ட ஊராட்சி குழு அலுவலகத்தில் தேர்தல் நடந்தது. திமுக சார்பில் தேன்மொழி, அதிமுக சார்பில் ரமேஷ் போட்டியிட்டனர். திமுக, அதிமுகவில் தலா 6 உறுப்பினர்கள் இருந்த நிலையில், இன்று திமுக சார்பில் 6 பேரும், அதிமுக சார்பில் 5 பேரும் தேர்தலில் கலந்து கொண்டனர். அதிமுக உறுப்பினர் திருவிக பங்கேற்கவில்லை. தேர்தலை கலெக்டர் பிரபு சங்கர் நடத்தினார். தேர்தல் முடிவுகள் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்படும், நீதிமன்றம் தான் முடிவை அறிவிக்க வேண்டும் என்று கலெக்டர் கூறி விட்டு சென்றார். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த நாகம்பட்டி அருகே 4 கார்களில் வந்தவர்கள் தனது காரை வழிமறித்து தாக்கி, திருவிகவை கடத்திச்சென்று விட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார் தெரிவித்தார். இதுபற்றி போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் விஜயபாஸ்கர் கூறியதில் எதுவும் உண்மை இல்லை என்பது தெரியவந்தது.
முன்னாள் அமைச்சருடன் வருபவரை கடத்துவது அவ்வளவு சுலபமானது அல்ல. திமுக வெற்றி பெறும் நிலையில் இருந்ததால், அதை தடுக்க நீதிமன்றம் மூலம் விஜயபாஸ்கர் முயற்சி எடுத்தார். அது தோல்வியில் முடிந்து, தேர்தலை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டு விட்டது. இதனால் தேர்தலை நிறுத்த, கடத்தல் நாடகம் அரங்கேற்றினார். அதுவும் கைகொடுக்கவில்லை. தேர்தல் நடந்து விட்டது. இதன்மூலம் தேர்தலை நடத்த விஜயபாஸ்கர் நாடகம் அரங்கேற்றியது வெட்டவெளிச்சமாகி உள்ளது என கரூர் மக்கள் பேசிக்கொள்கின்றனர்.