Skip to content

ஈரோடு கிழக்கு தேர்தல் பணிக்கு 1194 அலுவலர்கள் நியமனம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 5-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. நேற்று 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது.

237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 20 சதவீதம் கூடுதலாக சேர்த்து முதன்மை அலுவலர்கள், முதல் நிலை அலுவலர்கள், 2-ம் நிலை அலுவலர்கள், 3-ம் நிலை அலுவலர்கள் தலா 284 பேரும், 1,200 வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடிகளுக்கு 4-ம் நிலை அலுவலர்கள் 58 பேரும் என மொத்தம் 1,194 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர்.

இவர்களுக்கு, ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா, தேர்தல் ஆணைய இணையதளத்தின் மூலம் கணினி சுழற்சி முறையில் 2-ம் கட்ட பணி ஒதுக்கீடு செய்தார். மேலும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு வருகிற 27-ந்தேதி அன்று ஈரோடு ரங்கம்பாளையம் ஆர்.ஏ.என்.எம். கலை அறிவியல் கல்லூரியில் நடத்தப்படுகிறது.