திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பொய்யான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததாக தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 125ஏ பிரிவின் கீழ் கே.சி.வீரமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2021 சட்டசபை தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, பொய்யான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததாக ராமமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
2021 ம் ஆண்டு ஏப்ரல், மே, ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் கே.சி.வீரமணி மீது ராமமூர்த்தி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து, நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்தார் ராமமூர்த்தி.
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான புகாரில் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்திலும் ராமமூர்த்தி வழக்கு தொடர்ந்தார். ராமமூர்த்தி அளித்த புகாரை விசாரித்து கே.சி.வீரமணி மீது உரிய நடவடிக்கை எடுக்க தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் ஆணையம் நடத்திய ஆய்வில் கே.சி.வீரமணி, பிரமாணப் பத்திரத்தில் சொத்துகளை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. கே.சி.வீரமணி தனது பிரமாணப் பத்திரத்தில் பல பரிவர்த்தனைகளை மறைத்திருப்பதையும், வருமான வரிக் கணக்கில் முரண்பாடுகள் உள்ளதையும் கண்டுபிடித்து தேர்தல் ஆணையம் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. கவனக்குறைவால் பிரமாண பத்திரத்தில் தவறு நேர்ந்துவிட்டதாக கேசி வீரமணி அளித்த விளக்கத்தை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. கேசி வீரமணி பொய்யான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து தேர்தலில் போட்டியிட்டதாக திருப்பத்தூர் நீதிமன்றத்தில் தேர்தல் அலுவலர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.நாட்டிலேயே முதன்முறையாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 125ஏ பிரிவின் கீழ் கே.சி.வீரமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.