இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி பாராளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு 27-சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் நாளுக்கு முந்தைய 72 மணி நேரத்தில் பின்பற்றப்பட வேண்டிய தேர்தல் நடத்தை விதிகள் குறித்து 27-சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் 27- சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதி / அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
அனைத்து வேட்பாளர்களும் 48 மணி நேரத்திற்கு முன்பாக (17.04.2024 மாலை 06.00 மணி முதல்) தேர்தல் பிரச்சாரங்கள் செய்வதை நிறுத்தி விட வேண்டும் என்றும், அதன் பின்பு திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் வெளியூரிலிருந்து பிரச்சாரத்திற்காக வந்த நபர்கள் தொடர்ந்து இப்பாராளுமன்ற தொகுதியில் இருக்க அனுமதியில்லை என்றும், தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிகளில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளும் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தல் தொடர்பான சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கூட்டத்தில் தேர்தல் ஆணைய வழிமுறைகளின் படி 27-சிதம்பரம் (தனி) பாராளுமன்றத்திற்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சட்டம் மற்றும் ஒழுங்கு முறையாக பராமரிக்கப்படும் என்றும், பதற்றமானதாக கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகளில் மற்றும் இடங்களில் போதுமான மத்திய ஆயுத போலீஸ் படை (CAPF) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும், பதட்டமான சூழ்நிலைகளை உருவாக்கக்கூடிய இடங்களில் உரிய கூடுதல் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது என்றும், மக்கள் எந்தவித அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிப்பதற்கு ஏதுவாக போதுமான காவலர்கள் பாராளுமன்ற தொகுதி முழுவதும் முழு அளவில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும், தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், பாராளுமன்ற தொகுதி முழுவதும் மாவட்ட காவல்துறையினர், மத்திய ஆயுத போலீஸ் படை (CAPF), சிறப்பு காவல் படையினர் மற்றும் ஆயுதமேந்திய காவலர்கள் (Armed Reserve) அனைத்து இடங்களிலும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றும், மேற்கண்டவாறு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் காவல் கண்காணிப்பாளர்களால் விரிவாக தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் மீதும் மற்றும் குறிப்பாக தேர்தல் தினத்தன்று தேர்தல் அமைதியாக நடப்பதை சீர்குலைக்க முனைவோர் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-விதிமுறைகளின் படியும், ஏனைய சட்ட விதிகளின் படியும் கடுமையான நடவடிக்கைகள் காவல்துறையால் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் நடத்தும் அலுவலர், 27-சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதி / அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணாவால் தெரிவிக்கப்பட்டது. இதனை தேர்தல் பார்வையாளர்களும் வலியுறுத்தினர்.
மேற்கண்ட கூட்டத்தில் 27-சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள தேர்தல் போலீஸ் பார்வையாளர் ஜின்மஜயா P.கைலாஷ், தேர்தல் பொது பார்வையாளர் போர் சிங் யாதவ், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் C.ஷ்யாமளாதேவி, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் L.ராஜாராம், சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலர்கள் (District Level Nodal Officers) மற்றும் உயர் காவல்துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.