இந்தியா முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 18வது மக்களவை தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்பட்டது. 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள 543 தொகுதிகளிலும் தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற தேர்தலுடன் அருணாசல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டமன்றங்களுக்கும், தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளன
டில்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தேர்தல் அட்டவணை வெளியிட்டு இந்தியிலும், ஆங்கிலத்திலும் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது :
இந்தியாவில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும். தமிழ்நாட்டில் முதல்கட்டத் தேர்தல் நடத்தப்படும். இதில் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலும் அடங்கும். ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
இந்த தேர்தலில் சுமார் 96.8 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர் . இவர்களில் 49.7 கோடி பேர் ஆண்கள். 47.1 கோடி பேர் பெண்கள். இவர்களில் முதன் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் எண்ணிக்கை 1.08 கோடி பேர். ஏப்ரல் 1ம் தேதி 18 வயது நிறைவடைந்தவர்களும் வாக்களிக்க தகுதி பெறுகிறார்கள்.
மக்களவை தேர்தலுக்கு நாடு முழுவதும் 10.5 லட்சம் வாக்கு ச்சாவடிகள் அமைக்கப்படும். 55 லட்சம் எந்திரங்கள் பயன்படுத்தப்படும். 1.5 கோடி அலுவலர்கள் பயன்படுத்தப்படுவார்கள்.தமிழ்நாட்டில் மட்டும் 68, 144 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கலாம். பூத்களில் குடிநீர் வசதி செய்யப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். 40 சதவீதம் ஊனம் இருந்தாலே அவர்கள் வீட்டில் இருந்தபடி வாக்களிக்கலாம். 12 மாநிலங்களில் பெண் வாக்காளர்கள் அதிகம். நாட்டின் எந்த பகுதி்யில் இருந்தாலும் வாக்களிக்கலாம். கடந்த 2019 தேர்தலை விட இப்போது 6 சதவீதம் வாக்காளர்கள் அதிகரித்து உள்ளனர். தேர்தல் தொடர்பான புகார்களை சி விஜில் செயலி மூலம் புகார் அளிக்கலாம். ஆள்பலம், பண பலம், வதந்தி, தேர்தல் நடத்தை விதி மீறல் ஆகிய 4 சவால்கள் எங்கள் முன் உள்ளன. மாநில எல்லைகளை கண்காணிக்க சிறப்பு நெட்ஒர்க் ஏற்படுத்தி உள்ளோம்.
100 வயதை கடந்த 2.18 லட்சம் பேர் மக்களவை தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். சுமார் 20 கோடி இளம் வாக்காளர்கள் மக்களவை தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.வாக்காளர் பட்டியலில் சேர இன்றைய இளம்தலைமுறையினர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். முதல் தலைமுறை வாக்காளர்களில் 85.3 லட்சம் பேர் பெண்கள்
இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் தமிழகத்தில் 2ம் கட்டத்தில் தேர்தல் நடக்கிறது. தமிழகம் , புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அனைத்து விமான நிலையங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் கண்காணிப்பார்கள். சமூக வலைதளங்களில் பொய் செய்திகளை பரப்பாதீர்கள். எல்லைகளில் டிரோன்கள் மூலம் கண்காணிப்பு செய்யப்படும். சமூக வலைதளத்தில் பொய் செய்திகளை நீக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உரிமை உண்டு. தேர்தல் பிரசாரத்தில் வெறுப்பு பேச்சு கூடாது. சாதி, மதத்தை வைத்து பி்ரசாரம் செய்யக்கூடாது. தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க கூடாது. நட்சத்திர பேச்சாளர்கள் ஒழுங்கை கடைபிடிக்க வேண்டும்.
50 சதவீத வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நேரலை செய்யப்படும். குழந்தைகளை பிரசாரத்தில் ஈடுபடுத்தக்கூடாது. அரசியல் கட்சிகளின் செலவு வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். 2100 தேர்தல் பார்வையாளர்கள் நாடு முழுவதும் நியமிக்கப்பட உள்ளனர். 85 வயதுக்கு மேல் 82 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். சந்தேகத்திற்குரிய பணபரிமாற்றங்கள் குறித்து தினசரி வங்கி்கள் அறிக்கை தர வேண்டும். வன்முறைகள் ஈவு இரக்கமின்றி இரும்புகரம் கொண்டு அடக்கப்படும். தமிழ்நாட்டில் முதல்கட்ட தேர்தல் நடத்தப்படும். இதில் விளவங்கோடு இடைத்தேர்தலும் நடைபெறும்.
தமிழகத்தில் தேர்தல் நடக்கும் தேதி 19.4.2024 ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கிறது. தமிழ்நாட்டில் அடுத்த வாரம் அதாவது வரும் 20 தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கும் அதே நாளில் புதுச்சேரிக்கும் நடக்கிறது.
தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் தொடக்கம்…. மாா்ச் 20
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள், மார்ச் 27
வேட்புமனுக்கள் பரிசீலனை மார்ச் 28
வேட்புமனுக்கள் வாபஸ் பெற கடைசிநாள் மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியல் மார்ச் 30
வாக்கு எண்ணிக்கை ஜூன் 4.
2ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26
3ம் கட்டத் தேர்தல் மே 7
4ம் கட்டத் தேர்தல் மே 13
5ம் கட்டத் தேர்தல் மே 20
6ம் கட்டத் தேர்தல் மே 25
7ம் கட்டமான கடைசி கட்டத் தேர்தல் ஜூன் 1ம் தேதி நடக்கிறது.
இந்தியா முழுவதும் ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி ஒரே நாளில் நடக்கிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.
பேட்டியின்போது தேர்தல் ஆணையர்கள் ஞானேஸ்குமார், சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் உடனிருந்தனர்.