கோவை விளாங்குறிச்சி டைட்டல் பார்க் வளாகத்தில் எல்காட் நிறுவனத்தின் சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தினை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
புதிய எல்கார்ட் வளாகத்தை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின் , வாரப்பட்டி மற்றும் சூலூர் பகுதிகளில் அமைய உள்ள தொழில் பூங்காக்களுக்கான நில ஒதுக்கீட்டு ஆணைகளையும் தொழில் முனைவோருக்கு வழங்கினார்.
அதைத்தொடர்ந்து எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கண்ணன் கூறியதாவது:
கோவையில் திறக்கப்பட்ட இந்த கட்டிடம் எல்காட் நிறுவனத்தின் ஒன்பதாவது கட்டிடம் . 3500 பேர் பணிபுரியும் வகையில் அதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளுடன் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் உடனடியாக பயன்பாட்டிற்கு வருகிறது.
இன்று முதலே ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்படுவதாகவும், இன்று இரு நிறுவனங்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும் எனவும் எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கண்ணன் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கோவை வாரப்பட்டி ராணுவ பூங்காவில் அமைய உள்ள நிறுவனங்களுக்கு இட ஒதுக்கீட்டு அணைகளும் வழங்கப்பட்டது.
வாரப்பட்டி ராணுவ தொழில் பூங்காவிற்கு டிட்கோ, சிப்காட் மூலம் இடம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் இதன் மூலம் ராணுவத்திக்கு தேவையான உபகரணங்களை பெரிய நிறுவனம் மட்டுமே செய்ய முடியும் என்ற நிலை மாறி சிறிய நிறுவனங்களும் ராணுவ உபகரணங்களை செய்யமுடியும் எனவும் தெரிவித்தார்
வாரப்பட்டியில் அமைய இருக்கும் ராணுவ பூங்காவில் 65 ஏக்கரில் 110 நிறுவனங்கள் வரை வர இருப்பதாகவும் நில ஒதுக்கீட்டு ஆணை பெற்றவர்கள் தெரிவித்தனர். இன்று முதல்கட்டமாக5 நிறுவனங்களுக்கு நில ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டது குறிப்பிட தக்கது.