தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை தடை செய்ய வேண்டும். இதுவரை ஸ்டேட் வங்கி பெற்ற தேர்தல் பத்திரங்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி டி ஒய். சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், பிப்ரவரி 15 அன்று ஒருமனதாக தீர்ப்பில் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை அரசியலமைப்புக்கு எதிரானது என்று ரத்து செய்தது.
இந்த நிலையில் மார்ச் 4 ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஒன்பது பக்க விண்ணப்பத்தை ஸ்டேட் வங்கி தாக்கல் செய்தது. தேர்தல் ஆணையத்திற்கு விவரங்களை வழங்க ஜூன் இறுதி வரை அவகாசம் தேவை என்று கேட்டது. தகவல் மற்றும் ஆவணங்கள் அதன் பல்வேறு கிளைகளில் சிதறிக்கிடந்தன, அவற்றை டிகோட் செய்வது கடினமானது மற்றும் நேரம் எடுக்கும் என்றும் ஸ்டேட் வங்கி கூறியது.
வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன், செருல் டிசோசா மற்றும் நேஹா ரதி ஆகியோர் மூலம் தாக்கல் செய்யப்பட்ட அவமதிப்பு மனுவில், நன்கொடையாளர்களின் விவரங்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு அநாமதேயமாக நன்கொடை அளிக்கப்பட்ட தொகை ஆகியவை மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படாமல் இருக்க வங்கி வேண்டுமென்றே முயற்சிக்கிறது என வங்கி மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், நாளை மாலைக்குள் ஸ்டேட் வங்கி தேர்தல் பத்திரங்கள் விவரங்களை வெளியிட வேண்டும். தேர்தல் கமிஷன் 15ம் தேதி அவற்றை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவுகளை அமல்படுத்தாவிட்டால் வங்கி அதிகாரிகள் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதுடன், ஸ்டேட் வங்கியின் மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது.