Skip to content
Home » கல்வி கடன் ரூ. 10 லட்சம் தருவதாக நூதன மோசடி…. 3 பெண்கள் உட்பட 5 பேர் கைது….

கல்வி கடன் ரூ. 10 லட்சம் தருவதாக நூதன மோசடி…. 3 பெண்கள் உட்பட 5 பேர் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம் வஞ்சினாபுரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பஞ்சநாதன் (44). இவரின் மகள் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 20.11.2023 அன்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர், தான் சென்னையில் உள்ள வங்கி ஒன்றில் இருந்து பேசுவதாகவும், உங்கள் மகளுக்கு கல்வி கடனாக ரூ.10 இலட்சம் தருவதாகவும் கூறியுள்ளார். பின்பு அவரின் மகளின் விவரங்களை whatsapp மூலம் பெற்றுக்கொண்டு, கல்வி கடன் பெறுவதற்கு, வருமான வரி ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது கடன் தொகை முன் பணம் ஆக ரூ.20000/- கட்ட வேண்டும் என கூற, இவர்களும் Gpay மூலமாக பணத்தைக் கட்டியுள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் தொடர்பு கொண்ட அந்த நபர், இந்த முன் பணத்தொகை போதாது, மேலும் பணம் கட்ட வேண்டும் எனக் கூற, பஞ்சநாதன் பல்வேறு தவணைகளாக 2,66,040/- ரூபாய் அனுப்பி உள்ளார். ஆனால் அவர்கள் எந்த கல்வி கடனையும் வழங்காததை அறிந்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, சம்பந்தப்பட்ட நபர்களின் மீது நடவடிக்கை எடுக்குமாறு பஞ்சநாதன் அரியலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள NCRP-பிரிவில் புகார் அளித்தார்.
இப்புகாரை பெற்ற அரியலூர் இணைய குற்ற பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நபர்கள் பயன்படுத்திய தொலைபேசி எண்களின் மூலம், அவர்கள் சென்னையில் இருப்பதை அறிந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி, இணைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கவிதா தலைமையிலான காவல்துறையினர், சென்னை சென்று மோசடியில் ஈடுபட்ட வினோத்குமார், சிவரஞ்சனி, சுரேகா, கிரிஜா, விஷால் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 5 செல்போன்கள் மற்றும் 5 வயர்லெஸ் போன்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் பிடிபட்ட நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட ராஜேஷ் என்பவரை கைது செய்தனர்.
இவ்வழக்கின் புலன் விசாரணையின் அடிப்படையில் மோசடிகள் ஈடுபட்ட ஐந்து நபர்களும், சென்னையில் உள்ள Propel Finways insurance நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டு Monthly Target Complete செய்வதற்காக, வாடிக்கையாளர்களுக்கு கல்வி கடன் தருவதாக, பொய்யாக கூறி அவர்களுடைய விருப்பமின்றி இன்சூரன்ஸ் செய்ததுடன், மோசடியாக பணம் பெற்றுள்ளனர். மேலும் இந்த நபர்களின் மீது திண்டுக்கல்,
சென்னை, மதுரை ஆகிய மாவட்டங்களிலும் பல்வேறு புகார்கள் பதிவாகியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.