தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 548 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வழங்கினர். இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டார்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மூளை முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்ட கும்பகோணம் வட்டத்தைச் சார்ந்த சிறுவனுக்கு சிறப்பு நாற்காலியும், தஞ்சாவூர் மாவட்டம் பாபாநாசம் வட்டத்தைச் சார்ந்த விஜயலெட்சுமிக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தொழிற்கல்வி பயின்று வருவதற்கான உதவித்தொகை ரூ.50,000க்கான காசோலையையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.