Skip to content

உச்சநீதிமன்ற தீர்ப்பு…..எடப்பாடி கொண்டாட்டம்….ஓபிஎஸ் எதிர்காலம் கேள்விக்குறி?

  • by Authour

அதிமுக பொதுக்குழு செல்லும், அதில்எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு  செய்யப்பட்டதும்,  பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 11 தீர்மானங்களும் செல்லும் என்று உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. அத்துடன் ஓபிஎஸ்சின் மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது.  இந்த தீர்ப்பு மூலம்  எடப்பாடிபெரும் வெற்றி பெற்று உள்ளார். அதே நேரத்தில்  ஓபிஎஸ்சின் அரசியல்  எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

இந்த தீர்ப்பு வந்ததும் அதிமுக  தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.  சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்  அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி  எடப்பாடிக்கு ஆதரவாக  வாழ்த்து கோஷம் போட்டனர். எடப்பாடி கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்தனர். இதுபோல தமிழகம் முழுவதும் தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

அதிமுகவுக்கு இனி சசிகலாசோ, ஓபிஎஸ்சோ சொந்தம் கொண்டாட முடியாத அளவுக்கு தீர்ப்பு அமைந்து விட்டதால் எடப்பாடி தரப்பினர் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். இனி ஓபிஎஸ்சும் அவரது அணியில் உள்ள  எம்.எல்.ஏக்கள் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஐயப்பன் ஆகியோரும்  தங்களை அதிமுக என்று உரிமைகோரவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தபோது எடப்பாடி, மதுரையில்  கட்சி நிர்வாகிகள் இல்ல திருமணங்களை நடத்தி வைத்தார். அப்போது இந்த செய்தி அவரிடம் தெரிவிக்கப்பட்டது.  இதனால் திருமண வீட்டிலும்  மகிழ்ச்சி கரைபுரண்டது.

இந்த தீர்ப்பு குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கூறும்போது, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தலை வணங்குகிறேன் என்றார்.  தீர்ப்பு குறித்து திருச்சியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறும்போது, இது எடப்பாடிக்கு தற்காலிக வெற்றி, அதிமுகவை மீட்கும் தனது முயற்சி தொடரும் என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!