தமிழ்நாடு பா.ஜ. தலைவர் அண்ணாமலை இன்று காலை எடப்பாடி, ஓபிஎஸ் ஆகிய இருவரையும் தனித்தனியாக சந்தித்து பேசினார். அப்போது அவர் இரு அணியும் ஒன்றிணைந்து ஈரோடு தேர்தலை சந்திக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிகிறது. இது எடப்பாடி அணிக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த நிலையில் பா.ஜ.கவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொன்னையன் நிருபர்களிடம் கூறியதாவது:
திமுக நீங்கலாக எல்லோருடன் சேர்ந்து இருக்க விரும்புகிறோம். எடப்பாடி தலைமையில் தான் இந்த தேர்தல் நடத்த வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். பாஜ.க விஷயத்தில் நாங்கள்(எடப்பாடி அணி) எச்சரிக்கையாக இருக்கிறோம். இரட்டை இலைக்கு சொந்தக்காரர்கள் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா, எடப்பாடி தான். சட்ட விதிகளை பின்பற்றாமல் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தை கைகாட்டுவதை ஏற்கமுடியாது. வடமாநிலங்களில் பா.ஜ.க. என்னென்ன செய்தது என்பதை நாங்களும் பார்த்து இருக்கிறோம். மக்களும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். உள்ளாட்சித்தேர்தலில் பா.ஜ.க. தனித்து தான் போட்டியிட்டது. 94.5% பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பக்கம் உள்ளதால், இரட்டை இலைஎடப்பாடிக்கு தான் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். பொன்னையனின் இந்த பேட்டி அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கை என அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.