Skip to content
Home » ஒருசில வாக்குறுதிகள் மட்டுமே திமுக நிறைவேற்றி உள்ளது…. திருச்சியில் எடப்பாடி பேச்சு

ஒருசில வாக்குறுதிகள் மட்டுமே திமுக நிறைவேற்றி உள்ளது…. திருச்சியில் எடப்பாடி பேச்சு

திருச்சி பெல் வளாகத்தில்  முன்னாள் முதல்வர் எம்.ஜிஆர் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு அ.தி.மு.க. திருச்சி புறநகா் தெற்கு மாவட்ட செயலாளா் ப.குமார் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட  அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவா் பேசியதாவது:

நம்மை உருவாக்கிய எம்.ஜி.ஆரின் சிலையை உங்களில் ஒருவனாக இருந்து திறந்து வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் மக்களுக்காக பணியாற்றி வாழ்ந்து மறைந்தவர்கள். அவர்கள் மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் மக்கள் மனதில் நீங்காமல் இடம்பெற்று உள்ளனர். நம்முடைய தலைவர்களுக்கு வாரிசு கிடையாது. நாம் தான் அவர்களின் வாரிசு. அவர்கள் மக்களுக்காக உழைத்தவா்கள்.  ஜெயலலிதா தனக்கு பிறகு ஒரு தொண்டன் கட்சிக்கு தலைவராக வரவேண்டும் என்று நினைத்தார்.

31 ஆண்டு ஆட்சி எந்த கொம்பனாலும் அ.தி.மு.க.வை அசைத்து பார்க்க முடியாது. மு.க.ஸ்டாலின் எவ்வளவோ முயன்றும் அ.தி.மு.க.வை அசைக்க முடியவில்லை. இதனால் தான் அவர் பி டீமை (ஓ.பன்னீர்செல்வம் அணி) உருவாக்கி உள்ளார். ஓ.பன்னீர்செல்வம் இங்கு மாநாடு நடத்தினார். ஆனால் நாம் எம்.ஜி.ஆர். சிலை திறக்கப்படும் என்று அறிவித்ததற்கே இங்கு மாநாடு போல் தொண்டர்களான நீங்கள் திரண்டு உள்ளீர்கள். தமிழகத்தில் 31 ஆண்டு காலம் ஆட்சி செய்த ஒரே கட்சி அ.தி.மு.க. தான். இன்று எதிர்க்கட்சிகளை எல்லாம் ஒன்றாக இணைத்து மத்தியில் ஆட்சி அமைக்கப்போவதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் 520 அறிவிப்புகளை மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். ஆனால் ஒரு சில அறிவிப்புகளை மட்டும் நிறைவேற்றிவிட்டு அனைத்தையும் நிறைவேற்றியதாக கூறுகிறார்கள். இங்குள்ள அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாநகருக்கு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் எதுவுமே செய்யவில்லை என்று கூறுகிறார். எங்கள் ஆட்சி காலத்தில் தான் திருச்சி மாநகருக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் பல கோடிக்கு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். திருச்சியில் தேசிய சட்டப்பள்ளி, வண்ணத்துப்பூச்சி பூங்கா, கல்லூரிகள் உள்பட பல கட்டிடங்கள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

. டெல்டா மாவட்ட விவசாயிகள் பல ஆண்டுகளாக காவிரி நீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். காவிரி நடுவர் மன்றத்தை சட்டரீதியாக கொண்டுவந்து காவிரி நதியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்க ஜெயலலிதா வழிவகை செய்தார். தற்போது டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடியை தொடங்கிவிட்டார்கள். கடந்த ஜூன் மாதம் 9 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். இதுவரை கர்நாடகா கொடுக்கவில்லை. ஆனால் தமிழக முதல்-அமைச்சர் மேட்டூர் அணையை திறந்து விட்டுவிட்டார். தற்போது அணையில் தண்ணீர் குறைந்து கொண்டு வருகிறது. கர்நாடகாவில் தி.மு.க.வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கிறது. அவர்களிடம் பேசி தண்ணீரை பெற்றுக்கொடுக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை. தி.மு.க. ஆட்சியில் மீத்தேன் எடுக்க போடப்பட்ட ஒப்பந்தத்தால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த அரசாங்கம் அ.தி.மு.க. அரசாங்கம். நல்லது செய்ய அ.தி.மு.க. தொண்டர்கள் பயப்படமாட்டார்கள். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார். கலந்து கொண்டவர்கள் விழாவில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள்தங்கமணி கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, சிவபதி,  மு.பரஞ்ஜோதி, அமைப்பு செயலாளர் ரத்தினவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *