தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி உடைந்ததால், இருவரும் தனி அணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேநேரத்தில் தென் மாநிலங்களில் பாஜக முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.இதனால் கர்நாடகா, தெலங்கானாவில் ஓரிரு இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. இதனால் வட மாநிலங்களில் தனது கவனத்தை பாஜக செலுத்தியது. இதற்காக தென் மாநிலங்களுக்கு கூட நிதி வழங்காமல், வட மாநிலங்களுக்கு அதிக நிதி வழங்கினர். மேலும், பல கட்சிகளை உடைத்து புதிய கட்சிகளை உருவாக்கி, அவர்களை தங்களுடன் இணைத்துக் கொண்டனர். இந்தியா கூட்டணியில் உள்ள ஒரு சில கட்சிகளை இழுத்து புதிய கூட்டணிக்கு முயன்றனர்.
ஆனால் அந்தக் கூட்டணிகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாததால் பீகார், மகாராஷ்டிரா, அரியானா ஆகிய மாநிலங்களில் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் பாஜக திணறி வருகிறது. அதேநேரத்தில் வட மாநிலங்களில் இந்தியா கூட்டணி சார்பில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பாஜகவினர் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் அதிமுக கூட்டணியை புதுப்பிக்க பாஜக மேலிடம் முடிவு செய்தது. இதற்காக ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரைக் கூட கூட்டணியில் சேர்க்காமல் அவர்களை மறைமுகமாக வெயிட்டிங் லிஸ்டில் வைத்துள்ளனர்.
மோடியின் இந்த தகவலை எடப்பாடி பழனிச்சாமியிடம் அதிமுக மூத்த தலைவர்கள் 2 பேர் தெரிவித்தனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ, இப்போதுதான் சிறுபான்மையினர் நம்மை நம்பத் தொடங்கியுள்ளனர். மேலும் தமிழகத்துக்காக பாஜக எதுவும் செய்யவில்லை. இப்போது பாஜகவுடன் சேர்ந்தால், நாமும் அழிந்து விடுவோம். நம் மீது மக்களுக்கு நம்பகத்தன்மை இல்லாமல் போய்விடும். எனவே நம் முடிவில் உறுதியாக இருப்போம் என்று கூறிவிட்டாராம்.
இந்த தகவலை பாஜக மேலிடத்தில் நீங்களே கூறிவிடுங்கள் என்றும் கூறிவிட்டார். இந்த தகவல் பாஜக மேலிடத்துக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை டெல்லிக்கு வரும்படி மேலிடம் அழைப்பு விடுத்ததால் அவரும் விரைந்துள்ளார். இதனால் டெல்லியில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக தற்போதுவரை கூட்டணிக்கு வராததால், புதிய அணி குறித்த அறிவிப்பை இன்று மாலை டெல்லி பாஜக எடுக்கும் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியோ, தனது அணிக்கு புதிய கட்சிகளை சேர்க்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளார். இதற்காக அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளார்.