அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தான் தலைவரான பிறகு பா.ஜ.க. வளர்ந்துள்ளதாக அண்ணாமலை மாயத்தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார். ஆனால் அவர் வந்த பிறகு ஓட்டு குறைந்துள்ளது. அதிமுகவை தொடர்ந்து குறை கூறியே அரசியல் செய்கிறார் .அண்ணாமலை வாயால் வடை சுடுகிறார்; அண்ணாமலை தமிழ்நாட்டுக்கு என்ன திட்டங்களை பெற்றுக் கொடுத்தார். கோவை தொகுதி மக்களுக்கு 100 வாக்குறுதி கொடுத்துள்ளார். எதை நிறைவேற்றுகிறார் என பார்ப்போம். கடந்த தேர்தலில் 300க்கும் அதிகமான இடங்களை பெற்ற பாஜக இன்று கூட்டணி கட்சி ஆதரவுடன் தான் ஆட்சி அமைத்துள்ளது. அதை அண்ணாமலை புரிந்து கொள்ளவேண்டும்.
பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவுப்படியே ஓ.பி.எஸ். கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். எனவே ஓ.பி.எஸ்சை சேர்க்க வாய்ப்பே இல்லை. அண்ணாமலை போன்றவர்களால் தான் மத்தியில் பாஜக பெரும்பான்மையை இழந்தது. சசிகலா2021ல் அரசியலுக்கு முழுக்கு போட்டதாக அறிக்கை விட்டவர். இப்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கிறார். அதிமுக ஒன்றும் கார்ப்பரேட் கம்பெனி அல்ல.எம்.ஜி.ஆர்.மறைவுக்கு பிறகு அதிமுக பிளவுபட்டபோது ஜானகி எப்படி நடந்துகொண்டாரோ அதேபோல் சசிகலா நடந்து கொள்ளவேண்டும். ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியது பொதுக்குழு முடிவு; மீண்டும் கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை .
இவ்வாறு அவர் கூறினார்.