தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார். அதிமுக அடிப்படை உறுப்பினர் என்ற முறையில் அவர் அந்த கோரிக்கை மனுவை வழங்கி உள்ளார். அதில், “அதிமுக பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட கட்சி திருத்த விதிகளை ஏற்றுக்கொள்ளகூடாது. இது கட்சி விதிகளுக்கு அப்பாற்ப்பட்டு உள்ளதால் இதனை அங்கீகரிக்க கூடாது. ஏனென்றால் திருத்த விதிகள் என்பது எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே பொதுச்செயலாளராக போட்டியிடும் வகையில் உள்ளது.
மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மேலும் ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் கூறினாலும் பாதிக்கப்பட்டவர்கள் சிவில் வழக்கு தாக்கல் செய்யலாம் என கூறியுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் தீர்வு காணும் வரை ஜூலை 11ல் திருத்த விதிகளுக்கு அங்கீகாரம் வழங்கக்கூடாது” என அந்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் ஆணையத்தில் பதில் மனு அளித்துள்ளார். அதில் சின்னம் தொடர்பாக வழக்கு தொடர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவருக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தம் கிடையாது. கட்சியின் உள் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. பொதுக்குழுவை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும் தீர்மானங்களை சென்னை உயர்நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது என எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.