Skip to content
Home » ஆர்.எஸ்.எஸ் மாதிரி வேலை செய்யுங்க… அதிமுகவினருக்கு எடப்பாடி அட்வைஸ்..

ஆர்.எஸ்.எஸ் மாதிரி வேலை செய்யுங்க… அதிமுகவினருக்கு எடப்பாடி அட்வைஸ்..

  • by Authour

சேலம் மாநகர், புறநகர் மாவட்ட அதிமுக கள ஆய்வு கூட்டம், மாஜி அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி ஆகியோர் தலைமையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்து. ஆனால் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு நடத்தினார்.  ஓமலூர் கட்சி அலுவலகத்தில்  நடந்த இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது.. கட்சிக்காரர்கள் அனைவரும் சிரமத்தில் தான் இருக்கிறீர்கள். நான் ஆட்சியில் இருந்த போது, நல்லாட்சி தர வேண்டும் என்பதற்காக உங்களை எல்லாம் கவனிக்கவில்லை. அதனை இப்போது தான் தெரிந்து கொண்டேன். வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடித்ததும், உங்களை எல்லாம் டாப்புக்கு கொண்டு செல்வேன். ஏமாற்ற மாட்டேன். நம்மிடம் கூட்டணி இல்லையே என நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதை நான் பார்த்துக் கொள்வேன். கடந்த நாடாளுமன்ற தேர்தலில், நம்மை மதிக்காத காரணத்தினால் தான் கூட்டணியில் இருந்து வெளியே வந்தோம். மதியாதார் வாசலை மிதிக்க கூடாது என்பதற்காக கூட்டணி வைக்கவில்லை. வரும் தேர்தலில் சிறப்பான கூட்டணியை அமைப்போம். அதைப்பற்றி நீங்கள் யாரும் யோசிக்க வேண்டாம். அதனை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் அனைவரும் அர்ப்பணிப்போடு வேலை செய்ய வேண்டும். மகாராஷ்டிராவில் பாஜ பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அதற்கு ஆர்எஸ்எஸ் தான் காரணம். எதையும் எதிர்பார்க்காமல் வேலை செய்து, வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளனர். அதேபோல், நாமும் வேலை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். பூத் கமிட்டி தான் மிகவும் முக்கியம். எனவே, ஒவ்வொரு பூத் கமிட்டியையும் ஒரு கிளையாக அமைத்து செயல்படவேண்டும். இது தேர்தலுக்கு மட்டுமல்ல. தொடர்ந்து இந்த பூத் கிளை செயல்படும். சேலம் மாவட்டம், அதிமுகவின் பொதுச்செயலாளரை தந்த மாவட்டம். எனவே, மற்ற மாவட்டங்களுக்கு முன்னோடி மாவட்டமாக இருக்க வேண்டும். யாரெல்லாம் வேலை செய்கிறீர்கள் என்பது எனக்கு தெரியும். இவ்வாறு அவர் பேசினார்.  ஆர் எஸ் எஸ்சை உதாரணமாக கூறி அதிமுக கூட்டத்தில் எடப்பாடி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *