Skip to content
Home » பாஜவுடன் மீண்டும் கூட்டணியா?.. எடப்பாடியின் பதிலால் நிர்வாகிகள் குழப்பம்..

பாஜவுடன் மீண்டும் கூட்டணியா?.. எடப்பாடியின் பதிலால் நிர்வாகிகள் குழப்பம்..

  • by Senthil

தஞ்சை, திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் பேசினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியில் என்னை பற்றி சில விமர்சனங்கள் செய்துள்ளார். குறிப்பாக ஆட்சியில் இருக்கும் போது எதுவும் செய்யவில்லை என கூறியுள்ளார். 2011 முதல் 2021 வரை மிக சிறந்த ஆட்சியை அதிமுக தந்துள்ளது. ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் வரை சிறப்பான ஆட்சி தந்தார்கள் அதன் பின் என் தலைமையிலான ஆட்சியிலும் சிறப்பான பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகள், சட்ட கல்லூரிகள், கலை அறிவியல் கல்லுரிகள் கொண்டு வந்தோம். அதிமுக ஆட்சியில் சேலத்தில் கட்டி முடிக்கப்பட்ட கால்நடை பூங்கா இன்று வரை திறக்கவில்லை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பம்தம் போட்டவர் தான் இன்றைய முதலமைச்சர். அதை ரத்து செய்த அரசாங்கம் அதிமுக அரசு என்றவரிடம் அதிமுக ஆட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு வழங்கப்படுமா என்கிற கேள்விக்கு, இது கற்பனையான கேள்வி, இன்னும் கூட்டணியே அமைக்கவில்லை, அப்படி இருக்கையில் கற்பனையான கேள்விக்கு பதில் கூற முடியாது. பா.ஜ.க உடன் கூட்டணி வைக்கப்படுமா என்கிற கேள்விக்கு ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைந்து தி.மு.க ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு. யார் யார் எங்களுடன் கூட்டணிக்கு வருகின்றார்களோ அவர்கள் எல்லாம் ஒத்த கருத்து உடையவர்கள் தான்.
தேர்தல் நேரத்தில் அரசியல் சூழலுக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் அதற்கு முன்பு எது கூறினாலும் அது நிற்காது. திமுக ஆட்சியை கூட்டணி கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில் கூட்டணியில் விரிசல் வந்துவிட்டதாக தான் மக்கள் நினைப்பார்கள். கூட்டணி உடையும் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது.திமுக கூட்டணி உறுதியாக உள்ளது என மீண்டும் மீண்டும் கூறுவதே அந்த கூட்டணி கட்சிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் தான் அதனால்தான் மக்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் பாஜக இல்லாத கூட்டணிக்கு அதிமுக தயாரா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு,
தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் திமுக ஆட்சியை வீழ்த்த அதிமுக தலைமையை ஏற்கக்கூடிய ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒன்றிணைத்து செயல்படுவோம் என்றார். பாஜகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என நிர்வாகிகள் கேபி முனுசாமி, ஜெயக்குமார், செல்லூர் ராஜீ போன்றவர்கள் கூறி வரும் நிலையில் எடப்பாடியின் மழுப்பல் பதில் நிர்வாகிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!