அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் . சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை தொடங்கியது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர்கள், அனைத்து மாவட்டச் செயலாளர்கள்,அதிமுக தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், தேர்தலின்போது மேற்கொள்ள வேண்டிய கள நடவடிக்கைகள், பிரசார அணுகுமுறைகள், அதிமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகள், அதிமுக சார்பில் கூட்டணிக்கு அழைக்க விரும்பும் கட்சிகள், அதற்கான வியூகங்களை அமைப்பது, தொண்டர்களின் மனநிலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பின்னர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் பேசினார். அவர் பேசும்போது,
மக்களவை தேர்தலில் நாம் மகத்தான கூட்டணி அமைப்போம். கூட்டணி அமைப்பதை நான் பார்த்துக்கொள்கிறேன். மக்களவை தேர்தல் பணிக்கான பணிகளை உடனே தொடங்குங்கள்’
அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறும் வகையில் வியூகம் அமைத்து செயல்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரி தொகுதி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நமது அணி வெற்றி பெற வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தலில் போட்டியிட தகுதியானவர்களை தேர்வு செய்யுங்கள், சமரியாதையுடன் நல்ல அந்தஸ்தில் இருக்க வேண்டும். ஆரம்பகால கட்சி தொண்டர்களாக இருக்க வேண்டும். தொகுதியில் பிரபலமாகவும், மக்கள் செல்வாக்கு உடையவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களின் பெயர்களை தயார் செய்து தலைமைக்கு அனுப்புங்கள்.
வரும் 17ம் தேதி எம்.ஜி.ஆர். பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடுங்கள். வாக்காளர்பட்டியலை சரிபாருங்கள். அதிமுக ஆதரவு வாக்குகளை நீக்கிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
இவ்வாறு அவர் பேசினார்.